நான் ரெடி...? டிடிவி தினகரனும், இபிஎஸூம் ரெடியா...? காத்திருக்கும் ஓபிஎஸ்

35


தேனி: 'அதிமுக மீண்டும் ஒன்றிணைய நான் ரெடி? டிடிவி தினகரனும், இபிஎஸூம் ரெடியா? என்று கேட்டு சொல்லுங்கள்,' என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


தேனி பெரியகுளத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; எந்தவொரு முடிவும் ஏற்படாமல் வதந்திகளாக வெளியிடுவதை பத்திரிக்கைகள், டிவி சேனல்கள், யுடியூப்களும் வெளியிடுவதை தவிர்ப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. நாங்கள் நடத்திக் கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக் குழுவை அமைத்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றோம்.


தேர்தலுக்காக அல்ல...





எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா? என்பதை நிருபித்துக் காண்பிப்பதற்காகவே நான் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டேன். பலாப்பழச் சின்னம். வெறும் 12 நாட்கள் தான் நான் பிரசாரத்தில் ஈடுபட்டேன். என்னை எதிர்த்து நின்றவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் இருந்து 6 ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்து என்னை எதிர்த்து களமிறக்கினார்கள். எப்படியாவது ஓபிஎஸை தோற்கடித்து, தொண்டர்களும், மக்களும் அவர் பக்கம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற செயற்கையாகச் செய்த சூழ்ச்சி தான் அது என்பதை சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

அந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து, சட்டப்போராட்டத்தின் மூலம் அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்டெடுப்பதே எங்களின் நோக்கம். தனிக்கட்சி தொடங்கவோ, தேர்தலில் போட்டியிடும் முடிவை நாங்கள் இன்னும் எடுக்கவில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள், யாராலும் வெல்ல முடியாத கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார்களோ, அந்த சூழ்நிலையை மீண்டும் உருவாக்கவே சட்டப்போராட்டம்.



முடிவுக்கு கட்டுப்படுவோம்







தேவையில்லாத குழப்பங்களை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். தேனி மாவட்டம் அதிமுக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை முதல்வராக்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்ற முறையில், இந்தப் போராட்டம் நடத்தி, என்னோடு தமிழகத்தில் இருக்கும் 88 மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் போராடி வருகிறோம். அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்களின் தலையாய கோரிக்கை.

நாங்கள் பிரிந்து கிடக்கிறோமா? இல்லையா? என்பது தமிழக மக்களுக்கு தெரியும். ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடாது என்று கடம்பூர் ராஜூக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று இன்றைய கூட்டத்தில் அனைத்து தொண்டர்களும் கூறினர்.


அண்ணன் இபிஎஸ்





டிடிவி தினகரன், அருமை அண்ணன் இபிஎஸூம் ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அதைத்தான் நாங்களும் சொல்லுகிறோம். எதிரும், புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், இபிஎஸூம் ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். நாங்கள் ஒன்றிணைய தயாராக இருக்கிறோம். டிடிவி தினகரன் இதனை இபிஎஸிடம் வலியுறுத்த வேண்டும். அப்படி செய்து இணைந்தால், அதிமுக மாபெரும் வெற்றி பெறும்.

ஜனநாயகக் கூட்டணியில் இணைய அழைப்பு வந்ததா? என்பது பரம ரகசியம். 2வது தர்மயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதே, தற்போது திமுகவில் இருக்கும் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் தான்.

தவெக அல்லது திமுகவில் இணையப்போவது போன்ற வதந்திகளை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். எங்களைப் பார்த்தால் பாவமாக தெரியவில்லையா? தொடர்ந்து, பொய்ச்செய்திகளை வெளியிட்டே வருகிறீர்கள். குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றே சில செய்திகளை வெளியிடுகின்றனர்.

நான் ரெடி...





அதிமுக மீண்டும் ஒன்றிணைய நான் ரெடி? டிடிவி தினகரனும், இபிஎஸூம் ரெடியா? என்று கேட்டு சொல்லுங்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement