தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

14


சென்னை: கடலூரில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முருகன், தமிழக போலீசார் என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயி ராஜேந்திரனை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொடூரமாக தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது? தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.


பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலீஸ் மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கு பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. போலீஸ் துறை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக போலீசார் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் எல்.முருகன் கூறியுள்ளார்.'

Advertisement