தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உண்பார்களா? நயினார் கேள்வி

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் உண்பார்களா என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை;

திருநெல்வேலி மாவட்டத்தில், அறிவாலய அரசு சார்பாகத் தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமான தரத்தில் இருப்பதாகவும், அதை உண்பவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள காணொளியைப் பார்க்கையில் மனம் வலிக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொட்டலங்களைக் குப்பை வண்டியில் கொண்டு வந்து இழிவுபடுத்தினார்கள். தற்போது திருநெல்வேலியில் கிட்டத்தட்ட கெட்டுப்போன உணவைக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறார்கள். கொஞ்சம் கூட அருவருப்பு பார்க்காமல் நமது சுற்றுப்புறக் குப்பைகளையும் கழிவுகளையும் கைகளால் அகற்றும் நல்ல உள்ளங்களுக்குத் திமுக அரசு காட்டும் நன்றிக்கடன் இதுதானா?

“சமூகநீதி” குறித்து பிறருக்கு வகுப்பெடுக்கும் முதல்வர் ஸ்டாலினோ, அவரது புதல்வரோ, அல்லது ஏதேனும் ஒரு திமுக தலைவரோ தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உணவினை ஒருவாயாவது உண்பார்களா?

தங்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள் எனக் கேட்கும் தூய்மைப் பணியாளர்களைத் தரமற்ற உணவைக் கொடுத்து மடைமாற்றி விடலாம் என நினைக்கும் திமுக அரசு எத்தகைய குரூர மனம் படைத்த நிர்வாகமாக இருக்கவேண்டும்?

இவ்வாறு அறிக்கையில் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

Advertisement