பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா; பட்டதாரி ஆசிரியர் கழகம் புறக்கணிக்க முடிவு

1

நமது நிருபர்

அரசு ஊழியர், ஆசிரியர்களின் 10 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிவிப்பால் ஏமாற்றப்பட்டு விட்டோம். எனவே பிப்.,8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

நிறுவனத் தலைவர் மாயவன், மாநிலத் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் குமரேசன் ஆகியோர் அறிக்கையில் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளில் முதலாவதான பழைய ஓய்வூதிய திட்டத்தை கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தமிழக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.


மாதந்தோறும் 10 சதவீதம் ஊதியத்தை ஓய்வு பெறும் வரை பிடித்தம் செய்து அதன் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட அனைத்து கோரிக்கைளையும் முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் பிப்.,8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு அறிவித்திருப்பது வேதனையாக உள்ளது.


எனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 25 ஆயிரம் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு சார்ந்து எந்த நிதி பங்களிப்பும் செலுத்த வேண்டாம். சற்று ஒதுங்கி இருக்கவும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement