ஒத்த கருத்துடன் பயணம்; ராகுல், கார்கேவை சந்தித்த பின் சசி தரூர் முடிவு

10

புதுடில்லி: ஒத்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுலை சந்தித்த பிறகு, எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர், கடந்த சில தினங்களாகவே பிரதமர் மோடி மற்றும் பாஜவின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியினரிடையே இருந்து கடும் அதிருப்தியும், விமர்சனங்களும் வந்தாலும், 'கட்சியை விட தேச நலனே முக்கியம்,' என்று கூறி வருகிறார்.

இதனிடையே, ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சி மற்றும் பார்லிமென்ட் கூட்டத் தொடர் குறித்து சோனியா வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களை சசிதரூர் அடுத்தடுத்து புறக்கணித்து வந்தார். இது பெரும் விவாதத்தை எழுப்பியது.

இந்த நிலையில், தற்போது பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுலை, சசிதரூர் இன்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், "இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருமித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement