மதுரை சிறுமியை கடத்தி பலாத்காரம் 'மிஸ்டு கால்' காதலால் விபரீதம்

மதுரை: மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த நபர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த கட்டட தொழிலாளியான பெண் ஒருவர், கணவரை பிரிந்து, இரு மகள்களை வளர்த்து வருகிறார். 16 வயதான மூத்த மகள், 10ம் வகுப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவரை தாய் கண்டித்ததால், நவம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, விருதுநகரை சேர்ந்த திருமணமான முனியாண்டி, 29, என்பவருடன், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். புகாரின்படி, சிறுமியை மீட்ட போலீசார், முனி யாண்டியை போக்சோவில் கைது செய்தனர்.

சிறுமியின் தாய் கூறுகையில், 'மகளை காணவில்லை என புகார் செய்தும், திருமங்கலம் போலீசார், புகாரை கிடப்பில் போட்டனர். 10 நாட்களுக்கு பின், மாதர் சங்கத்தினர் தலையீட்டால், புகாரை விசாரித்து, ஓசூர் காப்பகத்தில் இருந்து என் மகளை மீட்டனர்.

என் மகளிடம் விசாரித்ததில், முனியாண்டி என்பவர், அவளை கடத்தி, ஒரு கட்டடத்தில் அடைத்து பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

'இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. ஆனால், ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்' என்றார்.

போலீசார் கூறுகையில், 'ஒரு 'மிஸ்டு கால்' மூலம் முனியாண்டி, சிறுமிக்கு அறிமுகமாகி, இருவரும் காதலித்துள்ளனர். அதன்பின் வீட்டைவிட்டு வெளியேறி, ஓசூருக்கு முனியாண்டியுடன் சென்றதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, முனியாண்டியை கைது செய்து விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement