ரூ.2.99 கோடி கையாடல் 2 அலுவலர்கள் சிக்கினர்

கிருஷ்ணகிரி: மின் கட்டண வசூலில், 2.99 கோடி ரூபாய் கையாடல் செய்த, மின் அலுவலர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திப்பம்பட்டியைச் சேர்ந்த கணேசன், 53; மத்துார் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளராக பணியாற்றினார். 2013 - 2017 வரை, மின்கட்டண வசூல் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. அவருக்கு உடந்தையாக, போச்சம்பள்ளியைச் சேர்ந்த மின்வாரிய கணக்கு பிரிவு ஊழியர் செல்வம், 57, இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

கணேசன், ஜெகதேவி மின்வாரிய அலுவலகத்திற்கு, 2017ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். குற்றச்சாட்டுகள் வலுத்த நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அதில், கணேசன், செல்வம் இருவரும் சேர்ந்து, 2.99 கோடி ரூபாய் கையாடல் செய்தது தெரிந்தது.

அவர்களிடமிருந்து, 1.29 கோடி ரூபாயை, மின்வாரிய அதிகாரிகள் திரும்ப வசூல் செய்தனர். இது குறித்து, ஜெகதேவி மின்வாரிய இளநிலை பொறியாளர் சரவணன், 2021 ஜூன், 11ல், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். கணேசன், செல்வம் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, அப்போதைய கிருஷ்ணகிரி மின்பகிர்மான மேற்பார்வையாளர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும், 2.99 கோடி ரூபாய் கையாடல் செய்த குற்றத்திற்காக கைது செய்தனர்.

Advertisement