ராமதாசை ஆதரித்தவர்கள் என்னை ஆதரிக்கவில்லை: திருமாவளவன் ஆதங்கம்

26


சென்னை: '' ராமதாஸ் கட்சி துவக்கிய போது ஆதரவு கொடுத்த யாரும், எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை,'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.



நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ராமதாசும், நானும் சேர்ந்து தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணத்தினால் அவரும் நானும் பிரியும் நிலை ஏற்பட்டது. பிரிந்த போது தமிழ் உணர்வாளர்களும் தமிழ் அறிஞர்களும் யார் பின்னால் போனார்கள். உடனே, ராமதாஸ் பின்னால் போய்விட்டார்கள். ஒருவரும் திருமாவளவன் பின்னால் வரவில்லை. எது தடுத்தது? ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை?


ராமதாஸ் ஒரு இயக்க தலைவராக வந்தபோது அவரை தோளில் தூக்கி கொண்டாடியவர்கள் பெரியாரியவாதிகள், மார்க்சியவாதிகள், மார்க்சிய லெனினியவாதிகளும், '' திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதிய தலைவர் வந்துவிட்டார். புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போகிறோம். இனி திமுக அதிமுக வேண்டாம்'' என அவரை தூக்கி தோளில் கொண்டாடியவர்கள் யாராவது திருமாவளவன் எழுச்சி பெற்று வந்த காலத்தில் பக்கத்தில் இருந்து யாராவது ஆறுதல் சொல்லி இருப்பார்களா? ஆதரவு தெரிவித்து இருப்பார்களா? ஒரு வார்த்தை ஊக்கப்படுத்தி இருக்கிறார்களா?


இந்த எளிய மக்களை அமைப்பாக முயற்சிக்கும் இந்த கடினமான போராட்டத்தில் முன்னெடுக்கும் திருமாவளவனுக்கு யாராவது துணை நின்று இருப்பார்களா? யாரும் கிடையாது. அவரை தலைவர், தமிழ் இனத் தலைவர் தமிழ் இனக் காவலர் என்று எல்லாம் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ஒருவரும் திருமாவளவன் பின்னால் நிற்கவில்லை. திருமாவளவனுக்கு ஆறுதலாக நிற்கவில்லை. முட்டி மோதி சொந்த காலை ஊன்றி, கையை ஊன்றி, கரணம் போட்டுத்தான் இந்த இடத்தில் திருமாவளவன் நிற்கிறார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement