வாயை மூட முடியாமல் 2 ஆண்டுகளாக தவித்த சிறுமி: குணப்படுத்திய கொல்கட்டா அரசு டாக்டர்கள்

2

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், அரிய வகை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக வாய் திறந்த படியே இருந்ததை, கொல்கட்டாவைச் சேர்ந்த அரசு பல் டாக்டர்கள் குணப் படுத்தி உள்ளனர்.


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு அரியவகை நரம்பியல் கோளாறு ஏற்பட்டது. 'அக்யூட் டிசெமினேட்டட் என்செபலோமயலிட்டிஸ்' சுருக்கமாக ஏ.டி.இ.எம்., என்று அழைக்கப்படுகிறது. இதை, 'ஆட்டோ இம்யூன்' கோளாறு என டாக்டர்கள் வகைப் படுத்துகின்றனர்.


உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் நல்ல நிலையில் உள்ள செல்களை தாக்கும் செயலே, 'ஆட்டோ இம்யூன்' கோளாறு எனப்படுகிறது. மேற்கு வங்க சிறுமிக்கு இதில் அரியவகை கோளாறு ஏற்பட்டு, அது அவரது மூளை மற்றும் முதுகெலும்பு நரம்புகளை பாதித்தது. இதன் காரணமாக, சிறுமியின் தாடை மற்றும் முக தசைகளை கட்டுப்படுத்தும் நரம்புகள் கடுமையாக சேதமடைந்து, வாயை மூட முடியாத நிலை உருவானது. இதற்காக, மேற்கு வங்கத்தில் உள்ள பல மருத்துவமனைகளை சிறுமியின் பெற்றோர் நாடினர்.



வெளிமாநிலங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்தும் குணப்படுத்த முடியவில்லை; 900 நாட்களுக்கு மேலாக, சிறுமியின் வாய் திறந்த நிலையிலேயே இருந்தது. இதனால் வாயின் உள்பகுதி உலர்ந்து போதல், தாடை சமநிலை குலைவு, பற்கள் மேல்நோக்கிய அசாதாரணமாக வளர்ச்சி, தொற்று பாதிப்பு ஆகிய பிரச்னைகள் எழுந்தன. அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் சிறுமிக்கு கடும் சிரமமாக மாறின.


இந்நிலையில், சிறுமியை கொல்கட்டாவில் உள்ள ஆர் அகமது அரசு பல் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறப்பு மருத்துவக் குழுவினர், அவரது நிலையை விரிவாக ஆய்வு செய்தனர்.


ஆய்வின் முடிவில், 'இனி தாமதித்தால் நிரந்தர சேதம் ஏற்படும். உடனடியாக வாயை மூடச் செய்வது மருத்துவ ரீதியாக அவசியம்' என டாக்டர்கள் முடிவு செய்தனர். பின்புற பற்களை அகற்றுவதே ஒரே நடைமுறை தீர்வு என முடிவு செய்யப்பட்டது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சைக்குப் பின், சிறுமியால் தற்போது வாயை மூட முடிகிறது.



இது குறித்து டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: இரண்டரை ஆண்டுகளாக திறந்த நிலையில் உள்ள சிறுமியின் வாயை மூடச் செய்வது, தொற்று மற்றும் நிரந்தர சேதத்தைத் தடுப்பது ஆகியவற்றுக்காக பின்புற பற்கள் அகற்றப்பட்டன. அங்கு நிரந்தர பற்கள் மீண்டும் முளைக்காது.


சிறுமிக்கு அரிய நரம்பியல் கோளாறு உள்ளதால், அதற்கான சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. அது கட்டுப்பாட்டுக்கு வந்து, தாடை இயக்கம் சீரானால் செயற்கை பற்கள் பொருத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement