உறவை ஒட்டுப்போட்ட காங்கிரஸ் ராகுல் - சசிதரூர்!

2

புதுடில்லி: காங்கிரஸ் லோக்சபா எம்.பி., சசி தரூருக்கும் அக்கட்சி தலைமைக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை தரூர் நேற்று சந்தித்துப் பேசினார்.


அதன்பின், “ஒருமித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்,” என, அவர் தெரிவித்தார்.


கேரளாவின் திருவனந்தபுரம் லோக்சபா தொகுதி எம்.பி.,யும், காங்., மூத்தத் தலைவருமான சசி தரூர், 69, சமீபகாலமாக, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.,வின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வருகிறார்.

அதிருப்தி




இது, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும், அதை பொருட்படுத்தாத சசி தரூர், 'கட்சியை விட தேச நலனே முக்கியம்' என, குறிப்பிட்டார்.


இதற்கிடையே, விரைவில் நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தல் குறித்து, காங்., தலைவர் கார்கே தலைமையில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், கார்கே மற்றும் ராகுலை சசி தரூர் நேற்று சந்தித்து பேசினார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டார்.

பிரசாரம்




அதில், 'பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதம் நடந்தது. கார்கே மற்றும் ராகுலுக்கு என் நன்றிகள். நாட்டு மக்களுக்கு சேவை செய்ய, ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்' என குறிப்பிட்டிருந்தார்.


இதைத்தொடர்ந்து பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய சசி தரூர், “எல்லாம் நன்றாக உள்ளது. நாங்கள் ஒரே பக்கத்தில் இணைந்து செயல்படுகிறோம். நான் எப்போதும் என் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறேன்.


“கட்சித் தலைமையுடன் நடந்த இந்த சந்திப்பில், நான் எந்தப் பதவியும் கேட்கவில்லை. தற்போது, நான் லோக்சபா எம்.பி.,யாக உள்ளேன். எனக்கு ஓட்டளித்த மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன். அதற்காகவே நான் பணியாற்றி வருகிறேன். இதுதான் என் பணி,” என்றார்.

Advertisement