விலை மதிப்பில்லா அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்யும் நிலை; ஸ்ரீதர் வேம்பு வேதனை

21


சென்னை: 'திறமைமிக்கவர்களின் அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது தான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது,' என்று ஸோகோ நிறுவனரும், தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; காலனித்துவ பொருளாதாரத்தின் சாரம்சமே, மலிவான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுவது தான். நமது மதிப்பு கூட்டும் திறனைக் குறைவாக வைத்ததனால் தான், நாம் ஏழைகளாகவே வைக்கப்பட்டோம்.

திறமைமிக்கவர்களின் அறிவாற்றலை மலிவாக ஏற்றுமதி செய்து, மதிப்பு கூட்டப்பட்ட தொழில்நுட்பங்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்வது தான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது. இந்த திறனின் பெரும் பகுதியை நாமே தக்க வைக்க வேண்டும்.

இதன் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளின் முதலீடுகளை இந்தியா மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். அறிவுசார் சொத்துரிமை உருவாக்கப்படும் நமது நாட்டிலேயே, அவர்கள் அதற்குரிய நியாயமான பங்களிப்பை வழங்குகிறார்களா? அவர்கள் அதற்குரிய வரிகளைச் செலுத்துகிறார்களா? என்று நாம் பார்க்க வேண்டும்.

எதிர்காலத்தில் உலகளாவிய அறிவாற்றல் இன்னும் அதிகமாக இந்தியாவிலிருந்தே வரப்போகிறது. எனவே, இந்தப் பிரச்சனை மேலும் மேலும் முக்கியத்துவம் பெறும். நமது அறிவார்ந்த மக்களால் சேர்க்கப்படும் கூடுதல் மதிப்பு தான் மக்களுக்கு செழிப்பை கொடுக்கும். இது ஒவ்வொரு வளர்ந்த நாட்டிற்கும் பொருந்தும். இதுவே உண்மையான சமூக நீதியாகும்.

'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் கிராமப்புற வளர்ச்சி' என்ற கோட்பாட்டின் மையக்கரு இதுதான், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement