எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களை பாதுகாக்கும் விதிகளில்  'தெளிவு இல்லை!': பழைய விதியை பின்பற்றுமாறு யு.ஜி.சி.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

3

புதுடில்லி: யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு உயர் கல்வி நிறுவனங்களுக்காக கொண்டு வந்த புதிய சமத்துவ விதிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெளிவற்ற முறையில் இருக்கும் விதிகள் தவறாக பயன்படுத்தப்படலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.


நாடு முழுதும், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான புகார்கள் அதிகரித்ததால், உயர் கல்வித் துறையில் சமத்துவம் நிலவும் வகையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு புதிய விதியை கொண்டு வந்தது.

இந்த புதிய விதியின் கீழ், அந்தந்த கல்லுாரிகள், பல்கலைகளில் ஜாதி பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்க சிறப்பு கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.

விசாரணை



குறிப்பாக பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து வரும் புகார்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு உதவிகள் வழங்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.


ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கவும், இடஒதுக்கீடு முறையை வலுப்படுத்தவும் இந்த விதி கொண்டு வரப்பட்டாலும், பொதுப் பிரிவினருக்கு எதிராக உள்ளதாக நாடு முழுதும் சர்ச்சை எழுந்தது.


இது, தங்களுக்கு எதிராக பொய் புகார்களை அளிக்க வழிவகுக்கும் என பொதுப்பிரிவு மாணவர்கள் கவலை தெரிவித்தனர். அத்துடன், யு.ஜி.சி.,யின் புதிய விதிகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.


இவ்வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக் ஷி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஜாதி பாகுபாட்டிற்கான சட்டப்பூர்வ வரையறை, அறிவார்ந்த வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.


'புதிய விதியால், பொதுப்பிரிவை சேர்ந்த மாணவர் தன் அடையாளத்தின் அடிப்படையில், 'ராகிங்' செய்யப்படலாம். கல்லுாரி, பல்கலை வளாகங்களில் நிலவும் கள யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. 'இந்த விதிமுறைகள், ஜாதி அடிப்படையிலான பிரச்னைகளில் மட்டுமே முற்றிலும் கவனம் செலுத்துகின்றன' என வாதாடினார்.

ஆபத்து





இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நம் நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதில் பெற்ற வெற்றிகளை கடந்து, தற்போது நாம் பின்னோக்கி செல்கிறோமா என தோன்றுகிறது. பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்காக சிறப்பு சட்டங்களை இயற்ற, மாநில அரசுகளுக்கு, அரசியல் சாசன பிரிவு - 15/4 அதிகாரம் அளிக்கிறது.


அதே சமயம், கல்வி நிறுவனங்களுக்குள் சமூக பிளவுக்கு வழிவகுக்கும் வகையில், அதை கட்டமைப்பது ஆபத்தானது. நம் நாட்டின் ஒற்றுமை, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். அமெரிக்காவில் கருப்பு மற்றும் வெள்ளை இனத்தவருக்கு, தனித்தனி பள்ளிகள் இருப்பது போல, நம் நாட்டிலும் கொண்டு வரப்படாது என நம்புகிறோம்.


யு.ஜி.சி.,யின் புதிய சமத்துவ விதிகளில் தெளிவு இல்லை. எனவே, அந்த விதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் கொண்ட குழுவை அமைத்து, அவர்களின் கருத்துகளை கேட்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.


தற்போதைக்கு, யு.ஜி.சி.,யின் புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, ஜாதி பாகுபாட்டிற்கு எதிராக 2012ல் அமலான விதிகள் தொடரும்.


மனுதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்க வேண்டும். அதே சமயம், விளிம்புநிலை மக்களுக்கான குறைதீர் அமைப்பும் நடைமுறையில் இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஒத்திவைப்பு



இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மார்ச் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜாதி பாகுபாட்டால் தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தட்வியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement