ரஷ்யா தாக்குதல்களை நிறுத்த வேண்டும்; உக்ரைனுக்கு வருமாறு புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால்
கீவ்: உக்ரைனுக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால் விடுத்துள்ளார். அவர், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் மோதலை கைவிடுவோம் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதுஉக்ரைன் மற்றும் ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பு இருந்தபோதிலும், ரஷ்யா இரவு முழுவதும் உக்ரைன் மீது தாக்குதல் தொடர்ந்தது. உக்ரைன் விமானப்படையின் கூற்றுப்படி, ரஷ்யா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் 111 போர் ட்ரோன்களை உக்ரைன் நோக்கி ஏவியது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா எங்கள் எரிசக்தி உள்கட்டமைப்பை தாக்கவில்லை என்றால், நாங்கள் அவர்களுடையதைத் தாக்க மாட்டோம்.
நாங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். மேலும் பதற்றத்தைத் தணிக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவிற்குச் செல்வது சாத்தியமில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக புடின் மற்றும் டிரம்ப் இருவரையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பேச்சு வார்த்தைக்காக எந்த நாட்டிற்கும் செல்வேன் என்று ரஷ்யா எதிர்பார்க்கிறது. நான் அவரை உக்ரைனுக்கு (கீவ்) அழைக்க முடியும். அவர் வரட்டும். அவர் துணிந்தால், நிச்சயமாக நான் அவரைப் பகிரங்கமாக அழைக்கிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.