திமுக, உடனான கூட்டணி வலுவாக உள்ளது; காங்., மேலிட பொறுப்பாளர் உறுதி

1

ஈரோடு: காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது,” என தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா தெரிவித்தார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி காங்., மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா பங்கேற்றார்.

பின்னர், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் மாவட்ட காங்., தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, கட்சி வளர்ச்சி பணிகள் துவங்கி உள்ளன. ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கட்சி வளர்ச்சிக்காக தற்போது வந்துள்ளேன். காந்தி பெயரிலான 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை, மத்திய பா.ஜ., அரசு மாற்றியதை நாடு முழுதும் கண்டிக்கின்றனர்.

ஆனால், பெயர் மாற்றத்தையும் திட்டத்தை மாற்றியதையும் அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் வரவேற்பது கண்டத்துக்குரியது. ஏழைகளின் உண்மை நிலையை அறியாமல் அவர் பேசுகிறார்.

தமிழகத்தில் காங்., - தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூட்டணி தொடர்பாக, கட்சியின் தேசிய தலைவர் கார்கே, ராகுல் போன்றோர் மட்டுமே பேச வேண்டும். தேவையற்ற சர்ச்சை பேச்சுகளை தவிர்க்குமாறு காங்., தலைமை கேட்டுள்ளது. அதனால் தான், கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது என கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement