தனியார் கட்டிய தடுப்பணையை அகற்றும் வனத்துறை

திண்டுக்கல்: வனப்பகுதியில் சட்டவிரோதமாக நீர்வழித்தடங்களை மறித்து, தனியார் கட்டிய தடுப்பணையை, வனத்துறையினர் இடித்து அகற்றி வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச்சரகம், அரசமரத்துப்பட்டி பீட் பகுதியில், கரூரை சேர்ந்த தொழிலதிபர் குணசீலனுக்கு சொந்தமான, 100 ஏக்கருக்கும் அதிகமான பட்டா நிலத்தில், விவசாயம் செய்கிறார்.

டி.பண்ணைப்பட்டி, கோம்பை, பச்சமலை செல்லும் வழியில், அவரின் பட்டா நிலத்தையொட்டி, கோம்பை அணைக்கு செல்லும் நீரோடை உள்ளது.

இதை மறித்து, வனப்பகுதியை ஆக்கிரமித்து, அணைக்கு செல்லும் நீர்வழித்தடங்களை அழித்து, 100 மீட்டர் நீளம், 35 மீட்டர் உயரத்தில், 1 லட்சம் கனஅடி தண்ணீர் தேக்கிவைக்கும் அளவுக்கு, தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து தடைப்பட்டது. வனப்பகுதியில் விலங்குகள், யானைகள் வழித்தடத்தில் உள்ள நீரமைப்புகள் வறண்டு, உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதையறிந்த விவசாயிகள், வனத்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர்.

வனத்துறை அதிகாரிகள் ஆய்வில், சட்டவிரோதமாக தடுப்பணை கட்டியதுடன், வனப்பாதையை மாற்றியமைத்து, நான்கு மாடியில் ஆடம்பர பங்களாவை, விதிமீறி கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பணையை இடித்து அகற்றி, இயற்கை நீர்வழித்தடத்தை மீட்டுத்தர, குணசீலனுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அவகாசம் முடிந்த நிலையில், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவில், கன்னிவாடி வனச்சரக அலுவலர் குமரேசன் தலைமையிலான பணியாளர்கள், தடுப்பணையை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'காட்டுக்குள் விதிமீறல் குறித்த ஆய்வறிக்கை கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது உத்தரவில், நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தற்போது , தடுப்பணை நீர்வழித்தடங்கள் மீட்பு பணி நடக்கிறது' என்றனர்.

Advertisement