போயிங் விமானத்தில் சுவிட்ச் பழுது : தெளிவுபடுத்தியது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்

புதுடில்லி: லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா போயிங் 7878 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் பழுது கண்டறியப்பட்டது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெளிவுபடுத்தி உள்ளது.

பிப்ரவரி 1 ஆம் தேதி ,லண்டனிலிருந்து பெங்களூரு வந்த ஏர் இந்தியா போயிங் 787-8 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் பழுது கண்டறியப்பட்டதால், அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. விமானி சுவிட்ச் செயல்பாட்டில் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டு, போயிங் நிறுவனத்துடன் இணைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

லண்டனிலிருந்து புறப்பட்டபோது விமான எஞ்சின் எரிபொருள் சுவிட்ச் ரன் நிலையில் சரியாகப் படியவில்லை என விமானிகள் கவனித்தனர். மூன்றாவது முயற்சியில் அது சரியாகப் படிந்ததையடுத்து, சரிபார்ப்பிற்குப் பிறகு விமானம் பாதுகாப்பாக இயக்கப்பட்டது. பயணத்தின் போது எந்தவித அசாதாரண எச்சரிக்கைகளும் வரவில்லை.
பெங்களூருவில் தரையிறங்கிய பிறகு, ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனப் பரிந்துரைப்படி அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது.

சுவிட்சின் பூட்டு அமைப்பு திருப்திகரமாக இருந்தது. முறையான அழுத்தத்தைப் பயன்படுத்தும்போது அது சரியாகச் செயல்பட்டது.
சுவிட்சை முறையற்ற திசையில் அழுத்தும்போது மட்டுமே அது ரன் நிலையிலிருந்து கட்ஆட் நிலைக்கு நகர்வது கண்டறியப்பட்டது.
சுவிட்சைத் திறப்பதற்கான விசை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருந்தது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை ஆய்வு செய்ததில், அதில் காட்டப்படும் சுவிட்சை இயக்கும் முறை தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, போயிங் நிறுவனம் பரிந்துரைத்துள்ள சரியான வழிமுறைகளை அனைத்து விமானிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement