வெளியானது வர்த்தக ஒப்பந்தம் அல்ல; அறிவிப்பே! இறுதி பெறுமா, அரசியல் அறிவிப்பாகவே நீளுமா?

22

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி, 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டு அறிவிப்பு, இந்தியா - அமெரிக்கா இடையே, ஒரு முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரு பார்வையை உருவாக்கியுள்ளது. ஊடகங்களும் ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது போன்றே செய்திகளை வெளியிட்டன.



ஆனால் தரவுகள், அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை ஆழமாகப் பார்க்கும்போது, இது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட, சட்டப்பூர்வமான ஒப்பந்தம் அல்ல; இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒரு அரசியல் ஒப்புதல் அடிப்படையிலான அறிவிப்பு என்ற முடிவுக்கே நம்மை கொண்டு செல்கிறது.


உண்மையில், இது ஒரு அடிப்படை வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு. இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அதை ஒப்பந்தம் என்று கூறி இருக்கின்றனர்.


மற்றொருபுறம், ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள செய்திகள், அதிகபட்ச மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கானதாக இல்லை. மாறாக, இன்னும் தெளிவான அறிக்கைகள் வெளியாகாததால், இதை எச்சரிக்கையுடன் அணுக வேண்டியுள்ள நிலையே உள்ளது.

முரணான பதிவுகள்



அமெரிக்க அதிபரின் வரி குறைப்பு அறிவிப்பை வரவேற்றாலும், முன்கூட்டிய மகிழ்ச்சி வேண்டாம் என எச்சரிக்கும் வகையில், இந்திய சிறு மற்றும் குறு, நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பான எப்.ஐ.எஸ்.எம்.இ., எச்சரித்துள்ளது.


இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்; பின்னர் அது 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பு என அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.


இது சாதகமானது தான். ஆனால், இந்த முரணான பதிவுகள் குறித்த முழு விபரங்கள் இன்னும் வரவில்லை. அதேபோல், இந்த வரி குறைப்புகள் அனைத்து பொருட்களுக்கும் ஒரே மாதிரியானதல்ல; சராசரி அடிப்படையிலானவை. ஒவ்வொரு தயாரிப்புக்கும் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது இன்னும் முழுமையாக தெரியவில்லை.


மேலும், இந்த 18 சதவீதம் எம்.எப்.என்., எனப்படும் மிக விருப்பமான நாடு என்ற அடிப்படையிலான, சுங்க வரிக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறதா, அல்லது அதுவே இறுதி வரியா என்பதும் தெளிவில்லை என்கிறது இந்த அமைப்பு.


ஜி.டி.ஆர்.ஐ., எனப்படும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு, “இந்த ஒப்பந்தத்துக்கு பிறகும், ஸ்டீல், அலுமினியம் மற்றும் சில வாகன உதிரிபாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 'செக் ஷன் 232' சுங்க வரி விதிப்பு தொடரும்.

தெளிவில்லை



மருந்துகள், விமானங்கள், சில இயந்திர மற்றும் மின்னணு பாகங்களுக்கு ஏற்கனவே உள்ள பூஜ்ஜிய சுங்கங்கள் மாற்றமின்றி நீடிக்கும்” என்கிறது.


அமெரிக்க பொருட்களுக்கு வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்கும் என டிரம்ப் கூறுகிறார். ஆனால், எந்தெந்த பொருட்கள் இதில் அடங்கும் என்பது தெரியவில்லை. மேலும், அமெரிக்காவிலிருந்து இந்தியா 45 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும், நீண்டகால இலக்காகவே தோன்றுகிறது.


தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியா நான்கரை லட்சம் கோடி ரூபாய்க்கு குறைவாகவே, அதாவது இலக்கில் 10 சதவீதத்தை இறக்குமதி செய்வதாக, ஜி.டி.ஆர்.ஐ., தெரிவிக்கிறது. எனவே, இருநாடுகளின் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்த கூட்டு அறிக்கை, பேச்சுகளில் இறுதி செய்யப்பட்ட உரை, ஒப்பந்த காலக்கெடு மற்றும் அமலாக்கம் குறித்த தெளிவு வரும் வரை, இதை அரசியல்ரீதியாகவே அணுக வேண்டியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.


இருநாடுகளின் இறுதி செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்த கூட்டு அறிக்கை, பேச்சுகளில் இறுதி செய்யப்பட்ட உரை, ஒப்பந்த காலக்கெடு மற்றும் அமலாக்கம் குறித்த தெளிவு ஆகியவை வரும் வரை, இது இறுதியான ஒப்பந்தம் அல்ல

எழும் முக்கிய சந்தேகங்கள்



அமெரிக்காவின் இறக்குமதி வரி குறைப்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பதில் நிறுத்திக் கொள்ளப்பட்டு உள்ளது. 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகளுக்கு அமெரிக்கா வழங்கிய இந்த நன்மையை, சமூக வலைதளத்தில் வரவேற்ற பிரதமர் மோடி, அதே நேரம், டிரம்ப் முன்வைத்ததாக கூறப்படும் பல முக்கிய உறுதிமொழிகளை உறுதி செய்யவில்லை.

1.ரஷ்ய எண்ணெய் மீது முழு தடை விதிக்க இந்தியா ஒப்புக்கொண்டதா?



டிரம்ப் முழுமையான தடை என கூறினாலும், மோடியின் அறிக்கையில் இதற்கான குறிப்பே இல்லை. இந்தியாவின் ஆற்றல் பாதுகாப்பை கருதி, உடனடி முழு தடை சாத்தியமில்லை என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இந்த தடை எவ்வளவு காலத்துக்கு என்பதற்கும் பதில் இல்லை.

2. விவசாயம் போன்ற துறைகளில் இந்தியாவின் எதிர் கருத்துக்கள் மீறப்பட்டுள்ளனவா?



பால், மீன், கோழி, தானியங்கள் போன்ற துறைகளில் அமெரிக்க அணுகல் அதிகரிக்குமா என்பதில் தெளிவில்லை. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்குமா என்ற கேள்வியையே எழுப்புகிறது.

3. இந்திய வரி பூஜ்ஜியமா?



எந்தெந்த அமெரிக்க பொருட்களுக்கு இந்திய இறக்குமதி வரிகள் பூஜ்ஜியமாக்கப்படும்? எந்த காலக்கெடுவில் என்பது தெரியவில்லை.

4. அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு எப்படி?



ஒப்பந்த மீறல் ஏற்பட்டால் என்ன நடவடிக்கை என்பதற்கான நடைமுறை எதுவும் வெளியிடப்படவில்லை.

5. சேவைத் துறைக்கு என்ன பயன்?



சேவைகள் துறையை பொறுத்தவரை 'எச். 1பி' விசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்திய ஐ.டி., மற்றும் சேவை துறைக்கு சலுகைகள் கிடைக்குமா என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

@block_P@

அவசரம் காட்டிய டிரம்ப்



பிடி கொடுக்காமல் டிரம்ப் இழுத்து வந்த வர்த்தக ஒப்பந்தம், திடீரென முடிவானது எப்படி என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. கடுமையான வரி விதிப்பால், அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி குறைந்த நிலையில், ஜவுளி, கடல் உணவு, நகைகள் போன்ற வேலைவாய்ப்புக்கான துறைகள் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டு, டிரம்ப் அரசு விமர்சனத்தை சந்தித்தது.


அதோடு, அமெரிக்காவை தவிர்த்து வேறு புதிய சந்தைகளை நோக்கி இந்தியா காய் நகர்த்தியது. உச்ச கட்டமாக, 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டதும், அடுத்தது கனடாவை நோக்கிய நகர்வும் டிரம்ப் அரசை உலுக்கி விட்டதாக கூறப்படுகிறது.


ஒப்பந்தங்களின் தாய் என இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் அறிவித்த ஒப்பந்தத்தால், இந்தியாவின் மிகப்பெரிய சந்தை கைநழுவும் அபாயத்தை டிரம்ப் உணர்ந்ததாகவும், இதனால், அவசரமாக ஒப்பந்தத்தை அவர் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.block_P

@block_B@

வர்த்தக ஒப்பந்த நடைமுறை



பிற நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டு நிறைவேற்றும் போது, சில பொதுவான நடைமுறைகள் பின்பற்றப்படும். அவற்றில் குறிப்பிடத்தக்கவை:

* ஒப்பந்தத்தின் பயன் மற்றும் பாதிப்புகளை இரு நாடுகளும் முதலில் மதிப்பீடு செய்யும்

* ஒப்பந்தம் நடைமுறையில் சாத்தியமா என்பதை அறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்

* ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய துறைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் தீர்மானிக்கப்படும்

* அடுத்து, இரு நாடுகளின் பேச்சுக்கு, அமைக்கப்படும் குழுக்கள் அதிகாரப்பூர்வ ஆலோசனையை துவங்கும்

* தொடர்ந்து நடைபெறும் பேச்சுகளில், கருத்து வேறுபாடுகள் குறைக்கப்பட்டு, முடிவுக்கு வர முயற்சி செய்யப்படும்

* இறுதியில், ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரித்து சட்ட ரீதியாக பரிசீலிக்கப்படும்

* இதில் பல அமைச்சகங்களும் துாதரகங்களும் பங்கேற்கும்

* ஒப்பந்தம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின் கையெழுத்திடப்படும்

* பார்லி., ஒப்புதல் பெற்ற பின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.block_B

@quote@

இறுதி கட்டத்தில் ஒப்பந்தம்:



நாட்டின் மேலாண்மை மற்றும் பால் பொருள் உற்பத்தி துறைகளின் நலனில், எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளோம். வர்த்தக ஒப்பந்தம் அதன் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் அடங்கிய இந்தியா - அமெரிக்க கூட்டு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ஒப்பந்தம் இறுதியடையும் நிலையில், அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கான வரி, 50 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறையும்.

- பியூஷ் கோயல்,
மத்திய வர்த்தக அமைச்சர்.quote

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement