11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் அறிவிப்பு

கரூர்: 'கரூர் மாவட்டத்தில், 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியையொட்டி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 19 நெல் கொள்முதல் நிலையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, குளித்தலை வட்டம், பணிக்கம்பட்டி, வளையப்பட்டி, இனுங்கூர், நச்சலுார், கல்லடை, கே.பேட்டை, நங்கவரம், சின்னபனையூர், கழுகூர், திருச்சாப்பூர், புகழூர் வட்டம் அஞ்சூர் ஆகிய, 11 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. மின்னணு கொள்முதல் முறையில் சன்னரக நெல்(கிரேடு-ஏ) குவிண்டால் ஒன்றுக்கு, 2,545 ரூபாய், பொது ரக நெல், 2,500 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.


இங்கு, நெல் விற்பனை செய்ய, வி.ஏ.ஓ., சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு ஆகியவற்றுடன் நேரில் சென்று கைரேகை பதிவு மூலம் நெல்லை விற்பனை செய்யலாம். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் நடமாட்டம் இருப்பின், 18005993540 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement