15 நாட்களில் 807 பேர், நாள் ஒன்றுக்கு 54 பேர் மாயம்; தலைநகர் டில்லியில் திடுக்கிட வைக்கும் சம்பவங்கள்

புதுடில்லி: புதுடில்லியில் ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள். சராசரியாக கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

2026ம் ஆண்டு தொடங்கி முழுதாக ஒரு மாதம் முடிந்தவிட்ட நிலையில் தலைநகர் டில்லியில் போலீஸ் தரப்பில் இருந்து ஒரு புள்ளிவிவரம் கசிந்து உள்ளது. இந்த புள்ளி விவரத்தை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, தலைநகர் டில்லியில் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதியான முதல் 15 நாட்களில் மட்டும் 809 பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்களில் 509 பேர் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் ஆவர். அதில் 191 பேர் மைனர்கள். இந்த 191 பேரிலும் சிறுமிகள் மட்டுமே 146 பேர். எஞ்சிய 45 பேர் சிறுவர்கள்.

போலீசாரின் இந்த தரவுகள் படி, சராசரியாக நாள் ஒன்றுக்கு காணாமல் போவோரின் எண்ணிக்கை மட்டுமே 54 ஆக இருக்கிறது. குறிப்பாக, மாயமான மகளிர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாயமானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது. குழந்தைகளின் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

மொத்தமான மாயமானவர்களின் பதின்ம வயதை சேர்ந்தவர்கள் மட்டும் 169 பேர் ஆகும். இவர்களில் 138 பேர் மகளிர், 31 பேர் மட்டுமே இளைஞர்கள் ஆவர். 8 முதல் 12 வயது வரையுள்ள 8 சிறுவர்கள் உள்பட 13 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்களில் 8 சிறுவர்கள், 5 சிறுமிகள்.

இவர்கள் தவிர, 8 வயதுக்குட்பட்ட 9 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். இவர்களில் தற்போது வரை 6 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் விவரம் என்ன ஆனது என்றே தெரியாதது தான் சோகம்.

மாயமானவர்களில் வயது வந்தவர்களின் எண்ணிக்கையும் கவலையை அளிப்பதாகவே இருக்கிறது. 616 பேர் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் 363 பேர் பெண்கள் மற்றும் 253 பேர் ஆண்கள். இதில் 181 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றனர். எஞ்சிய 435 பேர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கின்றனர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போனவர்களின் பட்டியல் இன்னும் நீளம். கிட்டத்தட்ட 2.3 லட்சம் பேர் மாயமாகி இருக்கின்றனர். அவர்களின் 52,000 பதிவு செய்யப்பட்ட வழக்குகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பது அதிர்ச்சி ரகம்.

Advertisement