பயமுறுத்தும் பனிப்பொழிவு: இந்திய வீரர்களுக்கு தோனி எச்சரிக்கை

புதுடில்லி: ''பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில், இந்திய வீரர்கள் கவனமாக விளையாட வேண்டும்,'' என, முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்தார்.
இந்தியா, இலங்கையில், 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (பிப். 7 - மார்ச் 8) நடக்கவுள்ளது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.


இதுகுறித்து, 2007ல் இந்தியாவுக்கு 'டி-20' உலக கோப்பை பெற்றுத்தந்த கேப்டன் தோனி கூறியது: 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆபத்தான அணிகளில் இந்தியாவும் ஒன்று. ஒரு சிறந்த அணிக்கு என்ன தேவையோ, அனைத்தும் உள்ளன. மற்ற அணிகளை காட்டிலும், 'டி-20' போட்டியில் விளையாடி அனுபவம் வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் நிறைய உள்ளனர். போட்டியில் ஏற்படும் நெருக்கடிகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஆனால் பனிப்பொழிவு தான் கவலை தருகிறது. இது ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிடும். நான் விளையாடிய போதும் பனிப்பொழிவு தான் பயமுறுத்தியது. தவிர இது, 'டாஸ்' நிகழ்வை முக்கியமானதாக மாற்றிவிடும். எனவே வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் ரோகித் சர்மா 38, விராத் கோலி 37, விளையாடுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். விளையாட்டு நட்சத்திரங்களுக்கு வயது ஒரு தடையல்ல. உடற்தகுதி, திறமை இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். இவர்களை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தால் அணிக்கு பலம் தான். ஒரு வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை மற்றவர்கள் கூறத்தேவையில்லை. இது, வீரரின் தனிப்பட்ட முடிவு.
இவ்வாறு தோனி கூறினார்.

Advertisement