ஐசிசி., யு-19 உலகக்கோப்பை: இறுதி போட்டியில் இந்தியா

ஹராரே:ஐசிசி., யு19 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆப்கான் அணியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இளம் இந்தியா அணி பைனலுக்கு முன்னேறியது.

ஐசிசி., 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடக்கிறது.

16 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப் 1 ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளும், குரூப் 2 ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்நிலையில்,இன்று ஹராரேயில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் பிற்பகலில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் பைசல் ஷினோசாடா (110) மற்றும் உசைருல்லா நியாசாய் (101 ஆட்டமிழக்காமல் ) ஆகியோர் சதம் விளாசினர்.

311 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 115 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 311 ரன்கள் என்பது, 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை வரலாற்றிலேயே வெற்றிகரமாக விரட்டப்பட்ட அதிகபட்ச இலக்காகும்.
ஆரோன் ஜார்ஜ் அதிரடி சதம் :
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் 104 பந்துகளில் 115 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இவரது அதிரடி சதத்தால் கடினமான இலக்கை இந்தியா எளிதாக எட்டியது.
வைபவ் சூர்யவன்ஷி (68 ரன்கள், 33 பந்துகள்) மற்றும் கேப்டன் ஆயுஷ் மத்ரே (62 ரன்கள்) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது

Advertisement