தங்கம் வென்றார் ஈஷா சிங்: ஆசிய துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஈஷா சிங் (10 மீ., 'ஏர் பிஸ்டல்') 2 தங்கம் வென்றார்.
டில்லியில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில், ஈஷா சிங், மனு பாகர், சுருச்சி அடங்கிய இந்திய அணி, 1726.53 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றது.


10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவில் இந்தியாவின் இந்தர் சிங் சுருச்சி (576.15 புள்ளி), மனு பாகர் (575.20), ஈஷா சிங் (575.18) முறையே 4, 5, 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
இதில் அசத்திய ஈஷா சிங், 239.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகளான சுருச்சி (197.7 புள்ளி), மனு பாகர் (135.3) முறையே 4, 7வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' அணிகள் பிரிவில் ராணா சாம்ராட், ஷர்வன் குமார், வருண் தோமர் அடங்கிய இந்திய அணி, 1732.52 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.

10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராணா சாம்ராட், 220.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ஷர்வன் குமார் (198.6) 4வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

ஜூனியர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோனாதன் கவின் அந்தோணி, 240.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இதன் அணிகள் பிரிவில் சிராக் சர்மா, ஜோனாதன் கவின் அந்தோணி, முகேஷ் அடங்கிய இந்திய அணி 1735.59 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

Advertisement