துபாயில் உறுப்பு தானம் காரங்காட்டில் உடல் அடக்கம்

திருவாடானை: துபாயில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் அங்கு தானம் செய்யப்பட்ட பின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டிற்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தொண்டி காரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கோல் கனிஷ்டன் 32. திருமணம் ஆகவில்லை. துபாயில் டிரைவராக வேலை பார்த்தார். சில மாதங்களுக்கு முன் விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். காரங்காட்டில் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். அதன்படி, துபாயிலேயே அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அனைத்து சட்ட நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில் செங்கோல் கனிஷ்டனின் உடல் நேற்று காலை துபாயிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான காரங்காடு கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. காரங்காடு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement