வர்த்தக ஒப்பந்தம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்: ஜெய்சங்கர்

புதுடில்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம், இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்திய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 18 சதவீதமாக டிரம்ப் குறைத்துள்ளார். இச்சூழ்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றார்.

இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்க பயணம் ஆக்கப்பூர்வமாக இருந்தது. சிறப்பான வரவேற்பு அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம், இறுதி செய்வதில் கடைசி கட்டத்தில் உள்ளது. விரைவில் முடிவடையும். இந்த ஒப்பந்தம் இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
உறவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். முக்கியமான கனிம வளங்கள் ஒத்துழைப்பில் விரைவிாக முன்னேறி வருகிறோம். பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்டவிவகாரங்களில் விவாதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement