ஜெ., சொத்துக்கள் ஏலம் விடப்படும் ஐகோர்ட்டில் வரித்துறை தகவல்

சென்னை,: 'ஜெயலலிதா செலுத்த வேண்டிய 20 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்தாவிட்டால், ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 13.69 கோடி ரூபாயை செலுத்தக்கோரி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, கடந்தாண்டு ஆக., 11ல் வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தீபா தரப்பில் வழக்கு தொடரப் பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தீபா தரப்பில், சரியான தொகையை தெரிவித்தால், வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி விபரங்களை வருமான வரித்துறை தாக்கல் செய்தது.

அதன் விபரம்:

கடந்த மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டத்துக்கு, வருமான வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து, 9 கோடியே 17,962 ரூபாய்; செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8,730 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் .

ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டு உள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32,342 ரூபாயை, ஆறு தவணைகளாக செலுத்துவதாக கூறி, 1 கோடியே 12 லட்சத்து 50,000 ரூபாயை செலுத்தி உள்ளார்.

வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சில சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி பாக்கி இதுவரை செலுத்தப்படவில்லை. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, வரும் 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement