தி.மு.க., - எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிய பா.ஜ., மனு

சென்னை: 'கனிமவளக் கொள்ளையை அம்பலப்படுத்த முயன்ற ஊடகவியலாளர்கள் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்திய தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ., வழக்கறிஞர்கள் மணி, மோகன்தாஸ் ஆகியோர், தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் கரூர் எஸ்.பி., அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரூர் மாவட்டத்தில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை அம்பலப்படுத்த, செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இரும்பு கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டதால், ஊடகவியலாளர்கள் காயமடைந்து உள்ளனர். அவர்களின், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'ட்ரோன்' கேமரா, மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல், தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும். குவாரியை இழுத்து மூட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement