'பேரு வச்சியே... சோறு வச்சியா' ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் நிலை குறித்து அன்புமணி விமர்சனம்

சென்னை: புதுக்கோட்டையில், எஸ்.சி., விடுதியில், மூன்று வேளையும் சோறு, ஊறுகாய் மட்டுமே வழங்கப்படுவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை சமூக நீதி விடுதிக்கு, மாணவியர் உணவுக்கான நிதி, கடந்த டிசம்பருக்குப் பின் வழங்கவில்லை. விடுதியில் அரிசி, காஸ் சிலிண்டர் மட்டுமே இருப்பதால், இரு மாதங்களாக சோறு மட்டும் வடித்து, சொந்த செலவில் ஊறுகாய் அல்லது 'சிப்ஸ்' வாங்கி, மாணவர்களுக்கு வழங்குவதாக விடுதி பணியாளர்கள் கூறுகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில், அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு, இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. புதுக்கோட்டை மட்டுமல்ல; தமிழகம் முழுதும் ஆதிதிராவிடர் நலத்துறை நடத்தும் 1,331 விடுதிகளிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.

கல்லுாரி மாணவ - மாணவியருக்கு உணவு வழங்க, மாதம் 1,500 ரூபாய், அதாவது தினம் 50 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும், ஒரு குறிப்பிட்ட தொகை, அதிகாரத்தில் இருப்பவர்களால் சுரண்டப்படுகிறது.

தி.மு.க., ஆட்சியில், விடுதிகளின் பெயரை, 'சமூக நீதி' விடுதிகள் என பெயர் மாற்றம் செய்யும் வேலை மட்டும் தான் நடந்தது. 'பேரு வச்சியே... சோறு வச்சியா?' என்ற திரைப்பட நகைச்சுவை போல, தி.மு.க., ஆட்சி நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement