விபத்தில் செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டு: ரூ.1 கோடி இழப்பீடு தர கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி:டூவீலர் விபத்தில் சிக்கி மூளை செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு, ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 851 இழப்பீடு வழங்க திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


திருநெல்வேலி கே.டி.சி. நகர் ரவிசங்கர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி முத்துலெட்சுமி, திருநெல்வேலி போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த 2016 மே 20-ம் தேதி மாலை, தனது ஸ்கூட்டரில் மாவட்ட கோர்ட் நோக்கிச் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த டூவீலர் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் முத்துலெட்சுமிக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன், மூளை செயல்பாடு பாதிக்கப்பட்டது. பேச்சுத் திறன் மற்றும் நினைவுத் திறன் முழுமையாக இழந்த அவர், படுத்த படுக்கையான நிலையில் உள்ளார். தொடர்ந்து போலீஸ் பணியையும் இழந்தார். மருத்துவக் குழு, அவருக்கு 79 சதவீதம் நிரந்தர ஊனம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தது.
இதையடுத்து, கணவர் சுப்பிரமணியன், மனைவிக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவருக்கு பென்ஷன் கிடைப்பதால் இழப்பீடு வழங்கக் கூடாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் வாதிட்டது.
ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். “விபத்து நடந்த நேரத்தில் அவர் பெற்ற சம்பளம், எதிர்கால ஊதிய உயர்வு, மருத்துவச் செலவுகள், வருமான இழப்பு, வலி மற்றும் வேதனை ஆகிய அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வழக்கை விசாரித்த நீதிபதி கதிரவன், பாதிக்கப்பட்ட முத்துலெட்சுமிக்கு மருத்துவச் செலவு, வருமான இழப்பு, நிரந்தர ஊனம், மன வேதனை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, மொத்தம் ரூ.1 கோடியே 4,851 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தத் தொகையை 7.5 சதவீத வட்டியுடன் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement