மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வெழுத ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்.,களுக்கு தடை
சென்னை:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்க, யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., சார்பில், 933 காலிப் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, வரும் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முதல்நிலை தேர்வு மே 24ல், முதன்மை தேர்வு ஆக., 21ல் துவங்க உள்ளன.இதில், ஐ.ஏ.எஸ்., 180 இடங்கள்; ஐ.பி.எஸ்., 150 -- 200 இடங்கள்; ஐ.எப்.எஸ்., வெளியுறவு 35 -- 40 பணியிடங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
புதிய மாற்றங்கள்
இந்தாண்டு, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறையில் நான்கு நிலைகளை யு.பி.எஸ்.சி., வகுத்துள்ளது. ஓ.டி.ஆர்., எனும் நிரந்தர பதிவு எண் பெறுதல்; தனிப்பட்ட கல்வி விபரங்களை நிரப்புதல்; எழுத விரும்புவது சிவில் சர்வீசஸ் தேர்வா, வனப்பணி தேர்வா என்பதை தெளிவுபடுத்துதல்; புகைப்படம், கையொப்பம், அடையாள அட்டையை பதிவேற்றி கட்டணம் செலுத்துதல் என, நான்கு நிலைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
'லைவ் போட்டோ'
விண்ணப்பிக்கும் போது, 'வெப்கேம்' வழியாக நேரடி புகைப்படம் இணைக்க வேண்டியது; தேர்வு மையத்துக்குள் நுழையும் போது, செயற்கை நுண்ணறிவு திறன் வாயிலாக முகத்தை, 'ஸ்கேன்' செய்வது உள்ளிட்ட நடைமுறைகளில், தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
'பிரபிதா சேது' எனும் இணையதளம் துவக்கப்பட்டு, தேர்வில் இறுதிவரை சென்று, தேர்வாகாதவர்களின் விபரங்கள் வெளியிடப்படும். இது, வேலை தரும் நிறுவனங்களுக்கும், தேர்வர்களுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும்.
பணியிடங்கள் குறைப்பு
யு.பி.எஸ்.சி., சார்பில், 2022ல் 1,022; 2023ல் 1,105; 2024ல் 1,056; 2025ல் 1,087 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தாண்டு, பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டி
ஒவ்வொரு ஆண்டும் 10 - 13 லட்சம் பேர், யு.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போதைய பணியிடங்கள் குறைப்பால், தேர்வர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவும். இதனால், ஒவ்வொரு நிலையையும் கடப்பதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண் உயரும். அதாவது, ஒரே மதிப்பெண்ணில் ஆயிரக்கணக்கானோர் போட்டியிடுவர். இந்நிலையில் இதுவரை, ஒரு பதவிக்கான முதன்மை தேர்வுக்கு, 15 நபர்கள் வரை அழைக்கப்படுவர். தற்போது, முதன்மை தேர்வுக்கு தேர்வாவதே பெரும் சவாலாக இருக்கும்.
ஒவ்வொரு நிலையிலும் மிக அதிக 'ரேங்க்' வைத்திருப்போருக்கு மட்டுமே, விரும்பும் பணியும், பதவியும் கிடைக்கும். இதனால், நீண்ட காலம் தயாராகும் தேர்வர்களுக்கும், கடைசி வாய்ப்பில் உள்ளவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படலாம்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்.,க்கு தடை
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., மற்றும் வெளியுறவு துறைக்கான ஐ.எப்.எஸ்., பணியில் உள்ளோர், தங்களின் 'ரேங்க்'ஐ அதிகரித்துக்கொள்ள மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவர். இனி அவ்வாறு எழுத விரும்பினால், பணியை ராஜினாமா செய்த பின்பே எழுத முடியும். அதேபோல், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீண்டும் தேர்வு எழுதலாம்; ஆனால், தேர்வில் அதிக ரேங்க் பெற்று, அதைவிட உயர் பதவிகளுக்கு மட்டுமே செல்ல முடியும்; மீண்டும் பழைய ஐ.பி.எஸ்., பதவிக்கு செல்ல முடியாது.
யு.பி.எஸ்.சி., இந்தாண்டு நிர்ணயித்துள்ள அதிரடி மாற்றங்களால், தேர்வெழுதுவோர் மட்டுமின்றி பணியில் இருப்போரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.