திட்ட மதிப்பீடு தயாரித்ததில் கவனக்குறைவு : உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
ஊட்டி : திட்டம் மதிப்பீடு தயாரித்ததில் கவன குறைவாக இருந்ததாக கூறி ஊட்டி நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஊட்டி நகராட்சியில் உதவி பொறியாளராக சண்முகசுந்தரம் மற்றும் பணி மேற்பார்வையாளராக சண்முகவள்ளி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவர்கள் இருவருமே வளர்ச்சி பணிகள் தொடர்பான திட்ட மதிப்பீடு தயாரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் போது கவன குறைவாக இருந்ததால் அந்தத் திட்ட மதிப்பீட்டில் பல்வேறு தவறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நகராட்சி துறை இயக்குனர் விசாரணை மேற்கொண்டார். அதில், இவர்கள் திட்ட மதிப்பீடு தயாரித்ததில் கவனக்குறைவாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் நகராட்சி துறை இயக்குனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
உதவி பொறியாளர் சண்முக சுந்தரம் மற்றும் சண்முகவள்ளி ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை நகராட்சி கவுன்சிலர்கள் சுமத்தி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. மேலும் இவர்கள் திட்ட மதிப்பீடு தயாரித்ததில் கவனக்குறைவாக இருந்ததால் மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்களா அல்லது வேறு காரணங்களுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.