உடல்நலக்குறைவால் உயிரிழந்த மோப்பநாய்
பந்தலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்தில், பணியாற்றிய மோப்பநாய் அதவை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், பல்வேறு வன குற்றங்கள் மற்றும் வனவிலங்குகளால் வளர்ப்பு கால்நடைகள் பாதிப்பின் போது, வனத்துறையினரின் விசாரணைக்கு உதவியாக இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது.
உரிய பயிற்சி அளிக்கப்பட்டு பல்வேறு இடங்களிலும், வன குற்றங்களை கண்டுபிடிப்பதில் உதவி உள்ளதுடன், சோதனைச் சாவடிகள் வழியாக வரும், வெளி மாநில வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள், குறித்து போலீசார் மற்றும் வனத்துறைக்கு உதவி செய்வது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தது.
இதில் சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த அதவை என்ற ஏழு வயது பெண் நாய், சிறப்பான முறையில் பணியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் குளிரை தாங்கிக் கொள்ள முடியாத சூழலில், உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தது.
உயிரிழந்த அதவைக்கு வனத்துறையினர் அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தி, அடக்கம் செய்தனர்.
கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், இந்த வகை நாய்கள் வெப்பமான பகுதியில் வாழும் தன்மை கொண்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில், 2021ல் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தது.
இரண்டு கம்பளிகள் போர்த்தி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கேரள மாநிலம் கல்பட்ட பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தது.
வனத்துறைக்கு இது பெரிய இழப்பாக உள்ள நிலையில், இனிவரும் காலங்களில் குளிர் தன்மையை தாங்கிக் கொள்ளும் வகையிலான மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்ட உள்ளது என்றார்.