கோப்பை வென்றது பெங்களூரு: டில்லி அணி ஏமாற்றம்
வதோதரா: பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பெங்களூரு அணி கோப்பை வென்றது. பைனலில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது.
வதோதராவில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் 4வது சீசனுக்கான பைனலில், டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
டில்லி அணிக்கு லிசெல் லீ (37), ஷைபாலி வர்மா (20) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பின் இணைந்த லாரா வால்வார்ட் (44*), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (57) ஜோடி நம்பிக்கை தந்தது. டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் எடுத்தது. சின்னெல்லே (35) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு ஸ்மிருதி, ஜார்ஜியா ஜோடி கைகொடுத்தது. பவுண்டரிகளாக விளாசிய இருவரும் அரைசதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 165 ரன் சேர்த்த போது மின்னு மணி பந்தில் ஜார்ஜியா (79) அவுட்டானார். சின்னெல்லே பந்தில் ஸ்மிருதி (87) போல்டானார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டது. ஸ்ரீ சரணி வீசிய 20வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த ராதா யாதவ் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூரு அணி 2வது முறையாக (2024, 2026) சாம்பியன் ஆனது. டில்லி அணி, தொடர்ச்சியாக 4வது முறையாக (2023-2026) பைனலில் தோற்றது.