ரஷ்யாவுடனான போரில் 55,000 வீரர்களை இழந்தோம் உக்ரைன் அதிபர் தகவல்
கீவ் :ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டியுள்ளது. இந்தப் போரில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கானவர்கள் வெளியேறியுள்ளனர். இருநாடுகள் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தலைமையில் பேச்சு நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடான பிரான்சின் 'டிவி' ஒன்றுக்கு போர் தொடர்பாக பேட்டியளித்திருந்தார். அதில், “உக்ரைனில், போர்க்களத்தில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக 55,000 ஆகும். மேலும், பெருமளவிலான வீரர்கள் காணாமல் போயுள்ளனர்,” என கூறியுள்ளார்.
இறந்த வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டில் 31,000 ஆகவும், கடந்த ஆண்டில் 46,000 ஆகவும் இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருப்பது போரின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ளது.