அமெரிக்க அதிபரை கொல்ல முயன்றவருக்கு 'ஆயுள்'

வாஷிங்டன்: தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை படுகொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரியான் ரூத்து என்பவருக்கு புளோரிடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 2024ல் நடந்த அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது இரண்டு முறை கொலை முயற்சி நடந்தது.

முதலில், 2024 ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது சுடப்பட்டார். அப்போது, அவரது காதில், தோட்டா உரசி சென்றது.

இதில் சிறிய காயத்துடன் அவர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தாமஸ் மேத்யூஸ் குரூக்ஸ், 20, என்ற இளைஞர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கிடையே, 2024 செப்., 15ம் தேதி, புளோரிடாவில் உள்ள தன் கோல்ப் மைதானத்தில் டொனால்டு டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது புதர்களுக்கு பின்னால் துப்பாக்கியுடன் மறைந்திருந்த, ரியான் ரூத், 59, என்பவர் பிடிப்பட்டார்.

அவர் மீது, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு, புளோரிடாவில் உள்ள மியாமி பெடரல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில், ரியான் ரூத் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆயுள் முழுதும் சிறையில் அடைக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement