துறை நிகழ்ச்சியில் பங்கேற்காத அமைச்சர்: முதல்வர் கடும் கோபம்

4

சென்னை: கைத்தறி துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், துறையின் அமைச்சர் காந்தி வராததால், அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அவரை கடுமையாக கண்டித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களின் திறனை, பிரபலப்படுத்தும் வகையில், கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.

இதன் துவக்க விழா மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா, நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.

கண்காட்சியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை. இதனால், முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார். காந்தியை அழைத்து விளக்கம் கேட்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகம் சென்றார். அங்கு நகராட்சி நிர்வாகம், பால்வளம், ஹிந்து சமய அறநிலையத்துறை தொடர்பான திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

அப்போது, அமைச்சர் காந்தி வந்து, முதல்வருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். அதை கோபமாக வாங்கிய முதல்வர், காலை நிகழ்ச்சிக்கு வராததற்காக, அவரை கடுமையாக கண்டித்தார்.

விளக்கம் சொல்ல காந்தி முயற்சித்த போது, வாயை மூடும்படி கூற, அருகிலிருந்த அமைச்சர் நேருவும், அவரை கண்டித்து ஒரமாக செல்லும்படி கூறினார். அவரும் அங்கிருந்து நகர்ந்தார். நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சரவை கூட்டத்தில் காந்தி பங்கேற்றார்.

Advertisement