பார்வையற்றோர் பள்ளி மாணவி கொலை? திருச்சி எஸ்.பி., விசாரிக்க உத்தரவு

திருச்சி: திருச்சி பார்வையற்றோர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவிட, அவரது தாய் தொடர்ந்த வழக்கில், திருச்சி எஸ்.பி., விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை குறைபாடுள்ள 17 வயது மாணவி, திருச்சி புத்துார் அரசு பார்வையற்றோர் பள்ளியில் கடந்த ஆண்டு ப்ளஸ் 2 படித்தார். தேர்வு நெருங்கிய நிலையில், 2025 மார்ச், 9ல் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அவர் உறவினர்களுடன் வந்து மகள் உடலை பார்த்தபோது, அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில், தன் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகியும், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

மாணவியின் உறவினர்கள் தொடர் போராட்டத்தால், பார்வையற்றோர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், விடுதி காப்பாளர் அனிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தன் மகள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என, தாய் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, திருச்சி மாவட்ட எஸ்.பி., தலைமையில் குழு அமைத்து, நான்கு வாரங்களுக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Advertisement