போலீஸ்காரர் மனைவியிடம் தங்க செயின் பறிப்பு: வாலிபர் கைது

பள்ளிப்பாளையம்: ஓடப்பள்ளி பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்த போலீஸ்காரரின் மனைவியிடம், தங்க செயின் பறித்த, சங்ககிரி பகுதியை சேர்ந்த வாலிபரை, பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

பள்ளிப்பாளையம் அருகே ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக உள்ளார். இவரது மனைவி உமாராணி,40, கடந்த, 4 ம்தேதி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த மர்ம நபர் ஒருவர், உமாராணி கழுத்தில் அணிந்து இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பினார்.

இதையடுத்து, பள்ளிப்பாளையம், டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். நேற்று, சங்ககிரி பகுதியை சேர்ந்த வேல்முருகன்,42, என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது; ஓடப்பள்ளி பகுதியில் செயின் பறிப்பு குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து விசாரணை செய்தோம்.

அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் டூவீலர் ஒன்று சென்றது. இந்த டூவீலரின் நம்பர் வைத்த விசாரணை செய்து, சங்ககிரி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரை கைது செய்தோம். அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நகை மீட்கப்பட்டது.

Advertisement