த.வெ.க.,விலிருந்து காங்.,குக்கு.. இறுதி கெடு ; 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள்

3

காங்கிரஸ் கட்சியை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, இதுவரை யாருமே கொடுக்காத 'ஆபர்'களை அளிக்க, த.வெ.க., தலைமை முன்வந்திருக்கிறது. 70 தொகுதிகள், துணை முதல்வர், ஆறு அமைச்சர்கள் என காங்கிரசுக்கு அள்ளித் தர, தமிழக வெற்றிக் கழகம் தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆபரை ஏற்க, ஒரு வாரம் இறுதி கெடு விதித்துள்ள த.வெ.க., தலைமை, அதற்கு 'ஓகே' சொன்னால், நேரடி பேச்சு நடத்தலாம்; இல்லையேல், களத்தில் சந்திக்கலாம் என கறாராக கூறி விட்டதாகவும் தெரிகிறது.
விக்கிரவாண்டியில் நடந்த த.வெ.க., முதல் மாநாட்டில், தங்களோடு வருபவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு கொடுப்பதாக அறிவித்தார், அக்கட்சியின் தலைவர் விஜய்.

இதன் பின்னர் தான், தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற கோஷம் வலுப்பெற்றது. நீண்ட காலமாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருக்கும் காங்கிரசாருக்கு, அந்த ஆசை தொற்றிக் கொண்டதால், த.வெ.க., பக்கம் சாய நினைக்கின்றனர்.

அதிகார பகிர்வு





ஆனால், அதற்கு தடை போடும் விதமாக, காங்கிரசின் டில்லி மேலிடத்திடம் தொடர்ச்சியாக பேசி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், காங்கிரசை இழுக்க, ஒரு பெரிய ஆபரை கொடுத்திருக்கிறது த.வெ.க., தலைமை.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

கடந்த 1967க்கு பின், காங்கிரசால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கவே முடியவில்லை. அத்துடன், தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு உரிய மரியாதையும் கிடைக்கவில்லை என, அக்கட்சியினர் குமுறி வருகின்றனர்.

அதிகார பகிர்வு என விஜய் அறிவித்ததால், தி.மு.க., மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரசார், தங்கள் கட்சி தலைவர் ராகுலின் ஆலோசகர் பிரவீன் சக்கரவர்த்தி வாயிலாக, த.வெ.க.,வுடன் கூட்டணி பேசி வருகின்றனர்.

கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினால், சிறுபான்மையினர் ஓட்டுகளை இழக்க வேண்டிய நெருக்கடி தி.மு.க.,வுக்கு ஏற்படும். இதை தடுக்க, காங்கிரசாருக்கு இடையில் மோதலை உருவாக்கும் தி.மு.க., மேலிடம், காங்கிரசுக்கு எதிராக தன் கூட்டணி கட்சிகளையும் துாண்டி விடுகிறது.

அதன்படி தான், இது நாள் வரை அமைதியாக இருந்த இரு கம்னியூஸ்ட் கட்சிகளும் ஒன்று போல, 'இம்முறை அதிக தொகுதிகளை கேட்போம்' என சொல்கின்றன.

இதன் வாயிலாக, 'நீங்கள் வரவில்லை என்றால், கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுப்போம்' என, காங்கிரசை மிரட்டி பார்க்கிறது தி.மு.க., மேலிடம்.

நெருக்கடி





மறுபக்கம், தன் மருமகன் சபரீசனையும், சகோதரி கனிமொழியையும் டில்லிக்கு அனுப்பி, ராகுலிடம் பேச வைக்கிறார் ஸ்டாலின்.

ஆனாலும், அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கூட்டணி குறித்து பேசாததால், த.வெ.க.,வுக்கும் ஒருவித நெருக்கடி உருவாகி விட்டது. எனவே தான், கடைசி அழைப்பாக, காங்கிரசிடம் த.வெ.க., தரப்பில்பேசப்பட்டு வருகிறது. அதாவது, 'தி.மு.க., கூட்டணியில் வெறும் ஐந்து தொகுதிகளை கூடுதலாக பெற, நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால், த.வெ.க., தரப்பில் 70 தொகுதிகளை தருகிறோம். தேர்தல் வெற்றிக்கு பின், துணை முதல்வர் பதவியும், ஆறு அமைச்சர்கள் பதவியும் கிடைக்கும். உள்ளாட்சிகளில் அப்போதைய தேவைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்கிறோம். எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை பார்த்து, ராஜ்யசபா எம்.பி.,க்களையும் பிரித்துக் கொள்ளலாம்' என, சொல்லப்பட்டு இருக்கிறது.


தனித்து களமிறங்குவோம்





'இதற்கு பதில் சொல்வதற்கு, இறுதி கெடுவாக ஒரு வாரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. ஆபரை ஒப்புக் கொண்டால், இரு கட்சி மேலிடமும் நேரடியாக பேசலாம்; இனி திரைமறைவு பேச்சு கிடையாது. இல்லையேல், நாங்கள் தனித்து களமிறங்க தயாராகி விடுவோம்' என்றும், காங்கிரஸ் தரப்பிடம் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது.

கடந்த 2011ல் தி.மு.க., கூட்டணியில், 63 தொகுதிகள் ஒதுக்கியது தான், காங்கிரசுக்கு உச்சபட்சமாக இருக்கிறது. காங்கிரசுக்கு இதுவரை இல்லாத ஆபரை, த.வெ.க., மேலிடம் கொடுத்திருக்கிறது.

ஒருவேளை, தி.மு.க.,வுடனே இருக்க காங்கிரஸ் முடிவெடுத்து விட்டாலும், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்களுக்கு 'டாட்டா பைபை' சொல்லி விட்டு, தேர்தல் வேலையை துவங்கி விடுவோம். அதனால் தான், இந்த ஆபரை கொடுக்கும்போதே, தனித்து நிற்க ஏதுவாக, விருப்ப மனு வினியோகத்தையும் விஜய் துவங்கி இருக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement