பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

4

ஜலந்தர்: பஞ்சாப்பில் குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆம் ஆத்மி தலைவர் லக்கி ஓபராய், சுமார் 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். பின்னர், தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்த புறப்பட்ட போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சுமார் 8 முதல் 10 முறை சுடப்பட்டதில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன.


இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் ஆம்ஆத்மி பஞ்சாயத்து தலைவர் ஜர்மல் சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலில், பட்டப்பகலில் ஆம்ஆத்மி தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மட்டும் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement