தர்மபுரி வனக்கோட்டத்தில் 172 இரைக்கொல்லி பறவைகள்

தர்மபுரி: தர்மபுரி வனக்கோட்டத்தில், பொரிப்புள்ளி ஆந்தை உட்பட, 172 எண்ணிக்கையிலான இரைக்கொல்லி பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வனத்துறை வழிகாட்டுதல் படி, தர்மபுரி மாவட்டத்தில் வனத்துறை சார்பில் கடந்த ஜன, 31 மற்றும், பிப்., 1 ஆகிய இரண்டு நாட்கள், இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

இதற்காக, தர்மபுரி வனக்கோட்டத்தில் உள்ள, 8 வனச்சரகங்களில், 14 கிரீடுகளாக பிரித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 14 கிரீடுகளிலும் ஜன., 31, மாலை, 6:30 முதல், இரவு, 9:30 மணி வரை இரவு நேர வேட்டையாடும் பறவைகள், பிப்., 1 காலை முதல் பகல் நேர வேட்டையாடும் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதில், பொரிப்புள்ளி ஆந்தை, கொண்டை பாம்புண்ணிக் கழுகு உள்ளிட்ட, 26 வகைகளில், 172 எண்ணிக்கையில் இரைக்கொல்லி பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பு பணியில், 40க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும், 30க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரைக்கொல்லி பறவை இனங்களின் புகைப்படங்கள் மற்றும் கண்காணிப்பு பதிவுகள் சேகரிக்கப்பட்டு, விரைவில் தொகுத்து ஆய்வு செய்ய உள்ளதாக, மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

Advertisement