சஸ்பெண்ட் போலீஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு; ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை

1

சென்னை:'வேலையே செய்யாமல் சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால், சஸ்பெண்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மீண்டும் பணியில் சேர்க்க முடிவு எடுக்க வேண்டும்' என, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஐ.ஜி.,க்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாநிலம் முழுதும், 439 பேர் சஸ்பெண்ட் ஆகி இருப்பதும், அவர்களில், 202 பேர், ஓராண்டுக்கு மேல் பணிக்கு திரும்ப முடியாமல் காத்திருப்பதும் தெரிய வந்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது தொடர்பான, கால வரம்பை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவர்கள் மீது, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும், அவற்றை இறுதி செய்வதிலும், தேவையற்ற தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

நீண்ட கால சஸ்பெண்ட் காரணமாக, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்த பணியும் செய்யாத நிலையில், அவர்களுக்கு அரசின் சார்பில் சம்பளம் தர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கும் போது, மிகுந்த கவனத்துடன், கட்டுப்பாடுகளை பின்பற்றி அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான எல்லா விபரங்களையும் பரிசீலனை செய்து, சஸ்பெண்ட் நடவடிக்கை அவசியம் தானா, அது பொது நலனுக்கு உகந்ததா என, தீர ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சஸ்பெண்ட் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் ஒவ்வொன்றையும், தனித்தனியாக ஆய்வு செய்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.

குற்றவியல் வழக்குகளில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக, முடிவு எடுக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மீண்டும் பணியில் சேர்க்கும்போது, அவர்கள் குற்றமற்றவர் என, அறிவிக்கப்படும் வரை, முக்கிய பணிகளில் நியமிக்கக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement