விஸ்வகர்மா திட்டத்தை மாநில அரசு தடுத்து விட்டது: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்: ''பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில், பதிவு செய்த 8.50 லட்சம் பேருக்கு எதுவுமே கிடைக்காம தமிழக அரசு செய்து விட்டது,'' என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த, தாட்டித்தோப்பு பகுதியில், முருகன் நெசவாளர்கள் குடியிருப்புகள் உள்ளன. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை நேற்று நெசவாளர்களின் குடியிப்பு பகுதிக்கு சென்றார்.

அங்கு, நெசவாளர்களிடம், ஒரு பட்டு சேலை நெய்வதற்கு எவ்வளவு நாளாகும். நீங்கள் குடும்பத்தை பார்த்துக்கொண்டு, எப்படி பட்டு நெசவில் ஈடுபட்டு வருகிறீர்கள் என, கேட்டறிந்தார்.

பின், தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களிடத்தில் நேரடியாக சென்று, அவர்களுக்கு என்ன பிரச்னைகள் உள்ளது. அதை எதிர்கொள்ள என்ன செய்வது என கேட்டு, அதை சரி செய்வதற்கு தேர்தல் அறிக்கை தயாரிக்க இருக்கிறோம்.

இங்கு ஒரு அக்காவை பார்த்தேன், 15 வயதில் இருந்து தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். மருத்துவர் என்ற முறையில் நெசவாளர்களிடம், 'உங்களுக்கு கண் டெஸ்ட் பண்ணாங்களா' என, கேட்டேன். 'கண்ணெல்லாம் தெரியாமல் போயி ரொம்ப நாளாச்சு' என்றனர்.

தொடர்ந்து அவர்கள் பணியாற்றி வருகின்றனர் இவர்களுக்கு, ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் கூட கிடையாது. இவர்களுக்கு எல்லாம் உதவி செய்வதற்கு தான் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்தாங்க, 8.50 லட்சம் பேர் பதிவு செய்தார்கள். உடனே, அதில் அரசியலாக்கி, அவர்களுக்கு எதுவுமே கிடைக்காம மாநில அரசு செய்தது.

தறியில் பணியாற்றுபவர்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க, பெண்களுக்கான சேலையை தறியில் நெய்பவர்களுக்கு, பொண்ணு கிடையாதுன்னு சொல்கிறாங்களாம்.

தறி கெட்டு அலையுறவங்களுக்கு எல்லாம் பொண்ணு கிடைக்குது. தறி வேலை செய்கிறவர்களுக்கு பொண்ணு கிடைக்கலையா? வருத்தமான விஷயம். விஷன், 2.0 திட்டத்தால் நெசவாளர்களின் துயர் துடைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., மாநில பொது செயலரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பாளர் குழுவைச் சேர்ந்தவருமான கார்திகாயிணி, மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் வஜ்ஜிரவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement