பாகிஸ்தானுக்கு தொடரும் பதிலடி; செனாப் நதி நீர் மின் திட்டத்துக்கு டெண்டர் கோரியது இந்தியா!

5

புதுடில்லி: செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக ரூ. 5129 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. மேலும் ராம்பன் மாவட்டத்தில் செனாப் நதி நீரை பயன்படுத்தி பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைத்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது.

சாவல்கோட் நீர்மின் திட்டம் எனப்படும் திட்டத்திற்காக மட்டும் ரூ.5129 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மின் திட்டத்தின் மூலம் 1856 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். திட்டம் தொடங்கும் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோருதல் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது.

மார்ச் 20ம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான காலக்கெடு முடிகிறது. தேசிய நீர்மின் கழகம் (National Hydro electric Power Corporation NHPC) இதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டு இருக்கிறது. மத்திய அரசானது 3285 நாட்களுக்குள் நீர் மின்திட்டத்தை அமைக்க வேண்டும் என்று உத்தேசித்துள்ளது.

இந்த திட்டம் நிறைவு பெற்றால், ஜம்மு காஷ்மீரின் மின் உற்பத்தி திறனானது கணிசமாக அதிகரிக்கும். பாகிஸ்தானுக்கு சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் கிடைக்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இந்தியாவுக்கு நீர் மின் சக்தியும், கூடுதல் தண்ணீரும் கிடைக்கும்; பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய தண்ணீரின் அளவு கணிசமாக குறையும்.

Advertisement