ஐந்து ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு முட்டை தான்: நயினார் நாகேந்திரன்

1

சேலம்: ''தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடு முட்டை தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.


சேலத்தில், 'நமோ டிராபி' மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த பின், அவர் அளித்த பேட்டி: விளையாட்டு உள்பட அனைத்து துறைகளிலும், பிற நாடுகளுக்கு சவால் விடும் வகையில், இந்தியா முன்னேறி வல்லரசாக மாறி வருகிறது-. பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்டம் தோறும், 'நமோ டிராபி' மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.


வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, 'தமிழர்களின் கலாசாரம், பண்பாடு மிகவும் பழமையானது; தமிழர்கள் பன்முக திறமை கொண்டவர்கள். தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களே அதற்கு சாட்சி,' என தமிழகத்தை உயர்வாக பேசி வருகிறார்.


ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், இவர்களை எல்லாம் தரம் தாழ்த்தி பேசி வருகிறார். தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எந்த நன்மையும் செய்யவில்லை; கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் செயல்பாடு முட்டை தான்.


தி.மு.க., ஆட்சியில், அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக, கணக்கு காட்டவே, 100 சதவீத திருப்பணி முடியாத நிலையில், பல கோவில்களில் ஆகம விதிகளுக்கு முரணாக, அவசர கதியில் கும்பாபிஷேகம் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement