முத்துப்பாண்டி ராஜா தேசிய சாதனை: 'சீனியர்' பளுதுாக்குதலில் அபாரம்

மோடிநகர்: தேசிய 'சீனியர்' பளுதுாக்குதலில் தமிழகத்தின் முத்துப்பாண்டி ராஜா, புதிய சாதனை படைத்தார்.

உ.பி.,யின் மோடிநகரில் தேசிய யூத், ஜூனியர், சீனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு போட்டி நடந்தன. காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற, தமிழகத்தின் முத்துப்பாண்டி ராஜா 26, பங்கேற்றார். ஏற்கனவே காமன்வெல்த்தில் 296, உலக சாம்பியன்ஷிப்பில் 299 கிலோ துாக்கிய முத்துப்பாண்டி, இம்முறை சிறப்பாக செயல்பட்டார்.

'ஸ்னாட்ச்' பிரிவில் 130 கிலோ, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 172 கிலோ என மொத்தம் 302 கிலோ துாக்கி, புதிய தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்றார். எஸ்.எஸ்.சி.பி., அணியின் சாரு பெசி (296), மிஜோரமின் ஜெரிமி (295) அடுத்த இரு இடம் பிடித்தனர்.

யூத், ஜூனியர் பிரிவில் எஸ்.எஸ்.சி.பி., அணியின் ஆறுமுக பாண்டியன், 282 கிலோ துாக்கி, 2 தங்கம் கைப்பற்றினார்.

Advertisement