அபாய அடிப்படையில் டிபாசிட் காப்பீடு பிரீமியம் வரும் ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது

அபாயங்கள் அடிப்படையில் வங்கிகள் டிபாசிட் காப்பீடுக்கு பிரீமியம் செலுத்தும் புதிய முறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் ஏப்.,1 முதல் இது அமலுக்கு வருகிறது.

தற்போது உள்ள நடைமுறையின்படி, அனைத்து வங்கிகளும் 100 ரூபாய் டிபாசிட்டுக்கு, ஒரே மாதிரியாக 12 பைசாவை காப்பீட்டு பிரீமியமாக செலுத்தி வருகின்றன.

இதற்கு மாறாக, புதிய முறையின் கீழ், வலுவான நிதிநிலை அறிக்கை மற்றும் அபாய கட்டுப்பாடுகள் கொண்ட வங்கிகள், குறைந்த பிரீமியம் செலுத்தினால் போதுமானது. பலவீனமாக உள்ள வங்கிகள், அதிக பிரீமியம் செலுத்த வேண்டும்.

அபாயங்கள் அடிப்படையில், சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படும் வங்கிகளுக்கு 33 சதவீதம் அளவுக்கு பிரீமியம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் செயல்பாடுகளின் அடிப்படையில், ஏ,பி,சி, டி என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். 'ஏ' பிரிவின் கீழ் உள்ள வங்கிகள் பாதுகாப்பானவை என கருதப்பட்டு, 100 ரூபாய் டிபாசிட்டுக்கு 8 பைசா பிரீமியமாக செலுத்தினால் போதும்.

'டி' பிரிவின் கீழ் வரும் வங்கிகள், அபாயமிக்கதாக கருதப்பட்டு, தற்போதைய விகிதமான 100 ரூபாய் டிபாசிட்டுக்கு 12 பைசா செலுத்த வேண்டும். அபாய மதிப்பீடு என்பது, தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் மேற்பார்வை தர மதிப்பீடு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

புதிய முறையால், டிபாசிட்தாரர்களுக்கு எவ்வித மாற்றமும் இருக்காது. வங்கிகளில் வைத்திருக்கும் டிபாசிட் கணக்குக்கு, அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் காப்பீடு என்பதில் மாற்றமில்லை.

Advertisement