அவிநாசியில் விவசாயிகள் உண்ணாவிரதம்

அவிநாசி: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அவிநாசி அடுத்த பழங்கரையில், உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது.

கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி, இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம், ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அணி, அத்திக்கடவு அவிநாசி போராட்டக் குழு உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு கூலி உயர்வு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு வழங்க வேண்டும். இனாம் நிலத்திற்கு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். ஐ.டி.பி.எல். எண்ணெய் குழாய்களை விவசாய விளை நிலங்களில் பதிப்பதை தவிர்த்து சாலையோரம் பதிக்க வேண்டும்.

ஊழல் நிறைந்த மானியத் திட்டங்களை கைவிட்டு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக வருடம் ஒருமுறை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பெருந்துறை முதல் காரமடை வரை விடுபட்ட 1400 குட்டைகள் இணைக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டத்துக்கு இயற்கை வேளாண் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஐந்துனை வேலுசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் நவீன் பிரபு ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement