ரூ.70 லட்சம் செலவழித்தும் பயனில்லை! சமுதாய நலக்கூடம் முடக்கம்

அன்னூர்: எழுபது லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது.

அன்னூர் ஒன்றியத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சிகளில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தலா 70 லட்சம் ரூபாயில், சமுதாய நலக்கூட கட்டடங்கள் கட்டப்பட்டன.

பல ஊராட்சிகளில் இந்த கட்டடங்கள், குறைந்த வாடகையில் சுப காரியங்கள் நடத்த பொது மக்களுக்கு உதவி வருகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களும் பல்வேறு அமைப்பினரும் நடத்தி வருகின்றனர்.

இது போன்ற சமுதாய நலக்கூடம் கட்ட, அ.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டன. 2024ல் பணிகள் முடிக்கப்பட்டன. பணிகள் முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இந்த சமுதாய நலக்கூடம் குறித்து, ஊராட்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அதிக வாடகை கொடுத்து தனியார் மண்டபங்களில், சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டி உள்ளது.

அரசு ஒதுக்கிய 70 லட்சம் ரூபாய் வீணாக முடங்கி கிடக்கிறது. இந்த கட்டடத்தை சுற்றியும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி விட்டது.

நாளடைவில் கட்டடம் பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என்றனர்.

Advertisement