ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு தனிப்படை அமைத்து தீவிர தேடல்

ஈரோடு: ஈரோடு அருகே ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க, தனிப்படை அமைத்து, ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை-மன்னார்குடி இடையிலான செம்மொழி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கடந்த, 5ம் தேதி அதிகாலை பயணித்த பெண்ணிடம், 2 பவுன் தங்க நகை, எர்ணாகுளம்-பிலாஸ்பூர் விரைவு ரயில் முன்பதிவு பெட்டியில் பயணித்த பெண்ணிடம், 4.25 பவுன் தங்க நகை ஒரே நாளில் ஈரோடு அருகே பறிக்கப்பட்டது.


'ஹோம் சிக்னல்' பகுதியில் நடந்த சம்பவம் குறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் ஆசாமியை பிடிக்க, ரயில்வே டி.எஸ்.பி., பாபு தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை சிறு தடயமும் கிடைக்கவில்லை.
ரயில்வே போலீசார் கூறியதாவது:


நகை பறிப்பில் ஈடுபடும் பழங்குற்றவாளிகள் பட்டியலை சேகரித்து விசாரிக்கிறோம். சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து ஆராயப்படுகிறது. ஹோம் சிக்னல் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.

Advertisement