பிரதமர் மோடியுடன் சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்திப்பு

2

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பிப்ரவரி 5ம் தேதி சென்னை வந்தார். தொடர்ந்து, சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நேற்று டில்லி வந்தடைந்தார்.

இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதற்காக சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினிக்கு பாராட்டு தெரிவித்தார்.



இந்த நிலையில், இன்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்தார். அப்போது, சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பிறகு பிரதமர் மோடி கூறியதாவது; ரூ.140 கோடி இந்தியர்களின் சார்பாக சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிபராக அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சீஷெல்ஸ் நாட்டின் 50வது சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில், நமது இருநாடுகளின் தூதரக உறவுகளின் 50வது ஆண்டையும் நினைவுகூரும் விதமாக, அவரது இந்திய வருகை அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையிலான தூதரக உறவையும் கடந்து, இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாக இருநாட்டு மக்களையும் இணைத்துள்ளது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையின் பாரம்பரியம் வலுப்பெற்றுள்ளது. சீஷெல்ஸ் கடல்சார் அண்டை நாடாகவும், நம்பகமான கூட்டாளியாகவும், இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும் விளங்குகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement